மெரினா கடற்கரையில் கடந்த மே 21 ஆம் தேதி தடையை மீறி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முயற்சித்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கடந்த 7 ஆண்டுகளாக மெரினா கடற்கரையில் 2009 ஆம் ஆண்டு மே 17 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்த ஆண்டும் மே 17 இயக்கம் சார்பாக மெழுவர்த்தி ஏந்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்திற்கு பிறகு மெரினாவில் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்தத் தடையால் மே 17 இயக்கத்தினருக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி போராட்டம் நடைபெறும் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்தார்.
போராட்டத்தின்போது காவல்துறையினருக்கும், மே 17 இயக்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடை செய்யப்பட்ட இடத்தில் அனுமதியில்லாமல் ஒன்று கூடியதால் திருமுருகன், டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரின் உத்தரவுப்படி அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.