கோவையில் சாடிவயல் முகாமில் இருந்த கும்கி யானைகள் பாரி, சுஜய் முதுமலைக்கு கொண்டுவரப்பட்டது.
கோவை வனக்கோட்டத்தில் யானை - மனித மோதல் அடிக்கடி நடக்கிறது. ஊருக்குள் ஊடுருவும் காட்டு யானைகளைத் துரத்துவதற்கு, பயிற்சி பெற்ற கும்கி யானைகள் உதவுகின்றன. இதற்காகவே, போளுவாம்பட்டி வனச்சரகத்திலுள்ள சாடிவயலில், யானைகள் முகாம் அமைக்கப்பட்டது. முதுமலையிலிருந்து பாரி மற்றும் சுஜய் ஆகிய யானைகள், இங்கு நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருந்தன. காட்டு யானைகளைத் துரத்துவதற்கு, வனத்துறையினர் இவற்றை பயன்படுத்தி வந்தனர். பல்வேறு, 'ஆபரேஷன்'களிலும் இவை முக்கிய பங்கு வகித்தன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சாடிவயல் முகாமில் இருந்த இவ்விரு யானைகளுக்கும் இடையில், போதிய இணக்கமில்லாமல் இருந்தது. கடந்த ஆண்டு, முகாமிற்குள் நுழைந்த காட்டு யானை தாக்கியதில், சுஜய்யின் ஒரு தந்தம் உடைந்தது. இதனால், பாரி மட்டும் காட்டு யானைகளை விரட்ட அழைத்து செல்லப்பட்டது; சுஜய்க்கு ஓய்வு அளிக்கப்பட்டது. தற்போது, இரு யானைகளுக்கும் ஓய்வு அளிக்கும் பொருட்டு இவற்றை முதுமலைக்கு மாற்றுவதற்கு வனத்துறையினர் முடிவு செய்தனர்.
அதன்படி சாடிவயலில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நிறைவடைந்த பின், பாரி மற்றும் சுஜய் ஆகியவற்றை முதுமலை மற்றும் டாப்சிலிப் கொண்டு செல்லப்பட்டது. இதன் பின் சேரன் மற்றும் ஜான் ஆகிய இரு கும்கி யானைகளைக் கொண்டு வர திட்டமிடப்பட்டு அவை இன்று கோவை வந்தன. கோவை வந்த ஜான் மற்றும் சேரனை வனதுறையினர் கரும்பு கொடுத்து ராஜ மரியாதையுடன் வரவேற்று முகாமில் இடம் கொடுத்தனர்.