கும்பகோணத்தில் ரவுடி மர்மசாவு அடைந்துள்ளார். இதனிடையே போலீசார் அவரை அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் எம்ஜிஆர் காலனியை சேர்ந்தவர் சிலம்பரசன் (30). இவர் சென்னையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் மீது சீர்காழி, மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் கொலை கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவர் பெயர் ரவுடி பட்டியலில் இருந்துள்ளது.
இந்நிலையில், சிலம்பரசன் கடந்த 9ஆம் தேதி தனது தாய் தந்தையரை பார்க்க தாராசுரத்திற்கு வந்துள்ளார். இதையறிந்த போலீசார், 9ஆம் தேதி இரவு சிலம்பரசனை பிடிப்பதற்காக அவரை விரட்டியுள்ளனர். இதை அறிந்த சிலம்பரசன் எம்ஜிஆர் காலனியில் உள்ள குளத்திற்குள் மூழ்கி மறைந்திருக்கிறார்.
இதையடுத்து இன்று காலையில் பார்த்தபோது சிலம்பரசன், வாயில் ரத்தத்துடன் பின்தலையில் ரத்தக் காயங்களுடன் தண்ணீருக்குள் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் சிலம்பரசன் உடலை மீட்டு கும்பகோணத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிலம்பரசன் மர்மமான முறையில் இறந்ததாக அவரது உறவினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அரசு மருத்துவமனை மார்சுவரி முன்பு கூடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.