கும்பகோணம் | நீதிமன்றம் வந்த ரவுடியை வேறொரு வழக்கில் கைது செய்த போலீஸ்... காத்திருந்த அதிர்ச்சி!

கும்பகோணத்தில் நீதிமன்றம் வந்த ரவுடியை வேறொரு வழக்கில் கைது செய்ய காத்திருந்த போலீஸ்... தகவலறிந்து பெண் வேடமிட்டு தப்பித்தபோதும் மடக்கிப்பிடித்த போலீஸ்... விசாரித்ததில், கொலை செய்ய காத்திருந்ததாக ரவுடி கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!
பெண் வேடமிட்டு தப்பிச்செல்ல முயன்ற ரவுடி குருமூர்த்தி
பெண் வேடமிட்டு தப்பிச்செல்ல முயன்ற ரவுடி குருமூர்த்திபுதிய தலைமுறை
Published on

செய்தியாளர் - விவேக்ராஜ்

கும்பகோணம் நீதிமன்றத்திற்கு வாரண்ட் ரீ-கால் செய்ய வந்த ரவுடியை, மற்றொரு வழக்கில் கைது செய்ய போலீசார் நீதிமன்றத்திற்கு வெளியே காத்திருந்த நிலையில், பெண் வேடமணிந்து ரவுடி தப்பிச் சென்றுள்ளார்‌. அவரை கும்பகோணம் ரயில் நிலையம் பகுதியில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நேற்று இரவு தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒருவரை கொலை செய்ய அவர் திட்டமிட்டிருந்து தெரியவந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் கன்னித்தோப்பு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான குருமூர்த்தி கடந்தாண்டு நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

ரவுடி குருமூர்த்தி
ரவுடி குருமூர்த்தி

வெளியே வந்த பின்னர், தன் கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு மணல் கொள்ளை, கஞ்சா விற்பனை மற்றும் கட்டப்பஞ்சாயத்து என ரவுடியிசம் செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக போலீசாருக்கு சிலர் ரகசிய தகவல் கொடுத்து வந்துள்ளனர். அதன்பேரில் குருமூர்த்தியை திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். 

இதற்கிடையே போலீசாருக்கு தன்னை பற்றி தகவல் அளிப்பவர்களை கொலை செய்ய போவதாக குருமூர்த்தி வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். இந்த மெசேஜ் போலீஸார் கவனத்திற்கு சென்ற நிலையில் குருமூர்த்தியை பிடிக்க தீவிரம் காட்டினர்.

இந்நிலையில் கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டின்மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் கும்பகோணம் நீதிமன்றத்தில் வாரண்ட் ரீ கால் செய்வதற்காக குருமூர்த்தி காரில் தனது கூட்டாளிகளுடன் திருபுவனத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். அப்போது கத்தி, பெரிய வாள் போன்ற ஆயுதங்களை சுழற்றியபடி “இன்று இரவு கொடூரமான கொலை ஒன்று நடக்கப்போகிறது” என எல்லோரையும் மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.

குருமூர்த்தியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்
குருமூர்த்தியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்

இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசாருக்கு தகவல் கிடைக்கவே, குருமூர்த்தியை பிடிப்பதற்காக காரை பின்தொடர்ந்து துரத்தி சென்றுள்ளனர். போலீசார் விரட்டி வருவதை அறிந்து காரில் இருந்து இறங்கி வேகமாக நீதிமன்றத்திற்குள் சென்றுள்ளார். அவரது கூட்டாளிகள் காருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தன்னுடைய குடும்பத்தினருக்கு குருமூர்த்தி தகவல் தெரிவித்து, “வாரண்ட் ரீ-கால் செய்ய வந்த என்னை போலீசார் கைது செய்ய வெளியே காத்திருக்கிறார்கள். அவர்களை தடுத்திடுங்கள்” என்று கூறியுள்ளார். அதன்பேரில் அங்கு வந்த அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்திற்கு முன்பு அமர்ந்து மண்ணெண்ணெய் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கும்பகோணம் நீதிமன்றம்
கும்பகோணம் நீதிமன்றம்

இதற்கிடையே நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும் குருமூர்த்தியை கைது செய்வதற்காக மஃப்டியில் நீதிமன்றத்தை சுற்றி போலீசார் காத்திருந்தனர். ஆனால், போலீசார் கவனத்தை தனது குடும்பத்தினர் பக்கம் திசை திருப்பிவிட்டு, புர்கா அணிந்துகொண்டு பெண் போன்று நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து தப்பி சென்றுள்ளார் குருமூர்த்தி.

இருப்பினும் கும்பகோணம் ரயில் நிலையம் அருகே, வாகன சோதனையின்போது குருமூர்த்தியை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த காரை போலீசார் பிடித்தனர். அந்த காரை ஓட்டி வந்த மற்றொரு ரவுடியான காட்டேரி ராமுவை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது காட்டேரி ராமு, “ரயில் நிலையத்திற்கு பின்புறம் குருமூர்த்தி காத்திருக்கிறார். அவரை அழைத்துச் செல்வதற்காக வந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட கார் - காட்டேரி ராமு
பறிமுதல் செய்யப்பட்ட கார் - காட்டேரி ராமு

இதையடுத்து மஃப்டியில் ரயில் நிலையம் பின்புறம் சென்று கண்காணித்த போலீசார், அங்கு புர்கா அணிந்து கொண்டு தனியாக அமர்ந்திருந்த குருமூர்த்தியை, மகளிர் போலீசார் உதவியுடன் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவரை நாச்சியார் கோவில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது குருமூர்த்தி, “நீதிமன்றத்தில் வாரண்ட் ரீ-கால் செய்துவிட்டு எங்களைப் பற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கும் நபரை இன்று இரவு கொலை செய்ய நினைத்தேன். அதன்பின் நானே நீதிமன்றத்தில் சரணடைய இருந்தேன்” எனக் கூறியுள்ளார். அதனைக் கேட்டு போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி “நான் ஒரு போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என முயற்சி செய்து வந்தேன். அது நடக்காததால், ரவுடியாகி என்னை பெரிய ஆளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தேன்” என குருமூர்த்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து குருமூர்த்தி, அவரது கூட்டாளிகளான காட்டேரி ராமு, சத்திய பிரகாஷ் ஆகியோரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து மூன்று பேரையும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

புதிய தலைமுறை

இவர்களை கைது செய்யாமல் விட்டிருந்தால் நேற்று இரவு கும்பகோணத்தில் ஒரு கொலை சம்பவம் அரங்கேறி இருக்கும். ஆனால் முன்னெச்சரிக்கையாக குற்றவாளிகளை கைது செய்து கொலையை தடுத்து நிறுத்திய திருவிடைமருதூர் போலீசாரை தஞ்சை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com