கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
கும்பகோணத்தைச் சேர்ந்த புதியராஜா என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், தனி மாவட்டமாக அறிவிக்கப்படுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் கும்பகோணம் பெற்றிருப்பதாகவும், தனி மாவட்டமாக அறிவித்தால் அரசின் திட்டங்கள் மிகச் சிறந்த முறையில் மக்களைச் சென்றடைய ஏதுவாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் வருவாய்த் துறை அலுவலகங்கள் கும்பகோணத்திலேயே அமைந்தால் மக்கள் சிரமமின்றி அங்கு சென்று வருவார்கள் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, தஞ்சை மாவட்டத்திலிருந்து கும்பகோணத்தை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு, புதிய மாவட்டம் உருவாக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட இயலாது என்று தெரிவித்தனர். இதனால் வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர் கூறினார். அதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.