செய்தியாளர்: விவேக்ராஜ்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு இன்று காலை இளம் பெண் ஒருவரை சிகிச்சைக்காக இளைஞர் ஒருவர் கொண்டு வந்துள்ளார். மயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து எதுவும் சொல்லாமல் அங்கிருந்து தப்பமுயன்ற இளைஞரை மருத்துவர்கள் பிடித்து கும்பகோணம் மேற்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், அந்த இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரை சேர்ந்தவர் என்பதும், மயிலாடுதுறையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருவதும் தெரிய வந்தது. அதேபோல் உயிரிழந்த இளம்பெண் தஞ்சை மாவட்டம் மதுக்கூரையைச் சேர்ந்தவர் என்பதும், மன்னார்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருவதும் தெரியவந்தது. இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், இருவரது கல்லூரிக்கு செல்வதாக சொல்லி விட்டு, கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள தனியார் தங்கு விடுதியில் நேற்று அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இன்று காலை மாணவிக்கு திடீர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு மாணவியை அழைத்து வந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அரசு மருத்துவமனைக்கு சென்று பார்க்குமாறு திருப்பி அனுப்பி உள்ளனர். இதையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார். மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததால், என்ன செய்வது என தெரியாமல் தப்பியோட முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து மாணவி உயிரிழந்தது குறித்து அவரிடம் விசாரித்த போது, தங்கியிருந்த விடுதி அறையில் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்து விட்டதாகவும், அதனால் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்ததாகவும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், கும்பகோணம் டிஎஸ்பி மற்றும் மேற்கு போலீசாருடன், தனியார் தங்கும் விடுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் அவர்கள் இருவரும் விடுதிக்குள் வரும் காட்சி மட்டும் பதிவாகாமல் இருந்தது. இது தொடர்பாக விடுதி மேலாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முகவரி உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்யாமல் இருப்பதற்காகவும், சிசிடிவி கேமராவை ஆஃப் செய்து வைக்கவும் அதிக பணம் பெற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னர் தங்கும் விடுதிக்கு வந்த தடைய அறிவியல் ஆய்வாளர்கள், அறையில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மோதிலால் தெருவில் உள்ள தங்கு விடுதியில் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.