கல்லூரி மாணவர் விடுதி சுகாதாரமற்று இருப்பதால் தாங்கள் நோய்தொற்றுக்கு ஆளாகி தவிப்பதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது. பாக்கரையிலிருந்து அசூர் செல்லும் சாலையில் இந்த விடுதி உள்ளது. இங்கு நிறைய மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். வசதி வாய்ப்பற்ற மாணவர்களுக்கு ஒரே அடைக்கலமாக உள்ள இந்த விடுதி பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளதாக இங்குள்ள மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
விடுதிக்குள் இருக்கும் கிணறு தூர்வாராப்படாமலும், கழிவுநீர் வெளியே செல்ல வடிகால் வசதி செய்யப்படாததாலும் அசுத்தமான நீர் தேங்கியுள்ளது. இதனால், விடுதிக்குள் நுழைந்தாலே துர்நாற்றம் வீசுகிறது. அடிப்படை வசதிகளும் இல்லை. படிப்பதற்கும் உறங்குவதற்கும் முடியாத அளவுக்கு சுற்றுப்புற சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு நோய்தொற்று உண்டாகியுள்ளது என்று மாணவர்கள் புகார் கூறுகின்றனர். தங்களுக்கு நல்ல சுற்றுச்சூழலை ஏற்படுத்தித் தரக் கோரி அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடதிய வட்டாட்சியர் பூங்கொடி இன்னும் 2 நாட்களில் விடுதி சீரமைக்கப்படும் என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.