கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் கே.எம்.சரயு. இவரது மகள் மிலி (2) . இவர் காவேரிப்பட்டினத்தில் உள்ள அரசு அங்கன்வாடியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் அருகில் உள்ள காவேரிப்பட்டினத்தில் தமிழக அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் காவேரிப்பட்டினம் அரசு சுகாதார நிலையம் அருகில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு முறையாக உணவு வழங்கப்படுகிறதா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேடு ஆகியவை முறையாகப் பராமரிக்கப்படுகிறதா, என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
இதனையடுத்து அங்குப் பயின்று வரும், தன்னுடைய மகள் படிப்பதைப் பார்த்து ரசித்தார். பின்னர் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் உணவைத் தனது மகள் மிலிக்கு ஊட்டியுள்ளார். பின்னர் ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்படத் தயாராகியுள்ளார். அப்போது ஆட்சியரின் மகள் மிலி தன்னையும் அழைத்துச் செல்லுமாறு மாவட்ட ஆட்சியரிடம் அடம் பிடித்து அழுதுள்ளார். பின்னர் ஆட்சியர் தன்னுடைய மகளை அங்கன்வாடி மையத்திலிருந்து அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
இந்த சம்பவம் அங்கு வந்திருந்த அதிகாரிகள்,மற்றும் பொது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய சூழலில் அரசுப் பணியில் பணியாற்றும் கிராம நிர்வாக உதவியாளர் முதல் பல்வேறு உயர் பொறுப்பில் இருக்கக்கூடிய அதிகாரிகள் வரை அவர்களுடைய குழந்தைகளைத் தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கிச் செல்கின்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்து கல்வி எல்லோருக்கும் சமம் அரசுப் பள்ளிகளும், தரம் வாய்ந்த பள்ளிகள் எனப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது குழந்தையை அரசு அங்கன்வாடி பள்ளியில் சேர்த்து ஏழை, எளிய, நடுத்தர குழந்தைகளுடன் இணைந்து கல்வி கற்க வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் முயற்சி பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.