செய்தியாளர்: கே.அரிபுத்திரன்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல் குமாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் வினோத் - ரேவதி தம்பதியர். இவர்களது மகள் சுப்ரியா, குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை அவர்களது விவசாய தோட்டத்திற்குச் சென்ற சுப்ரியா தக்காளி செடிகளுக்கு தண்ணீர் கட்டி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இந்நிலையில், நீண்ட நேரமாகியும் சுப்ரியா, வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோர் தேடியுள்ளனர். ஆனால், சுப்ரியா எங்கும் இல்லாததால் விவசாய கிணற்றில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகமடைந்த பெற்றோர். ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி மாணவியை சடலமாக மீட்டனர்.
இதையடுத்து மாணவியின் உடலை கைப்பற்றிய சாமல்பட்டி போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.