ஆடிக்கிருத்திகை பண்டிகையான நேற்று, கிருஷ்ணகிரி அருகே நேர்த்திக்கடன் செலுத்த 40 அடி உயரத்தில் கிரேனில் அலகு குத்தி சென்ற இளைஞர் திடீரென கீழே விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் அவர் உயிர் தப்பியுள்ளார்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகைன்று முருகப்பெருமானுக்கு பக்தர்கள் சிலர் அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று அச்சம் காரணமாக அரசின் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால், இந்த வழிபாட்டுக்கு தடை இருந்தது.
இந்த ஆண்டு நோய் தொற்று ஓரளவு கட்டுக்குள் இருந்தாலும்கூட, கடந்த சில தினங்களாக பரவல் அதிகரித்திருப்பதனால் இந்த ஆண்டும் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு விழாக்களுக்கு அரசு தரப்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் முக்கிய முருகர் ஆலயங்களில் ஆடிக்கிருத்திகை விழா பக்தர்கள் கூட்டம் இல்லாமல் அபிஷேக ஆராதனைகளுடன் நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள எட்றப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள முருகர் கோவிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. இதற்காக சின்னகொத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் உட்பட 4 நபர்கள் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கிரேன் வாகனத்தில் தங்கள் முதுகுகளில் அலகு குத்திக்கொண்டு 40 அடி உயரத்தில் முருகன் கோவிலை நோக்கி அந்தரத்தில் தொங்கியவாறு பம்பை முழக்கங்களுடன் ஊர்வலமாக சென்றனர்.
மேட்டுப்பாளையம் பகுதியை அவர்கள் கடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக நிலைதடுமாறி கிரேனிலிருந்து ஆகாஷ் மட்டும் அப்படியே கீழே விழுந்தார். தான் கீழே விழுவதை உணர்ந்துகொண்ட ஆகாஷ் தண்ணீரில் குதிப்பது போல் தரையில் குதித்தார். இதனால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்நிகழ்வையடுத்து நேர்த்திக்கடன் செலுத்த கிரேனில் சென்ற மற்ற மூவரும் கீழே இறங்கி நடந்து சென்று கோவிலில் சாமி தரிசனம் சென்று வீடு திரும்பினர்.
இதன் வீடியோ காட்சி வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடிக்கிருத்திகை ஆடி 18 விழா கொண்டாட அரசு தடை விதித்துள்ள நிலையில் தடையை மீறி நேர்த்திக்கடன் செலுத்த சென்று விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ம.ஜெகன்நாத்