கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பிளஸ் டூ மாணவர்களுக்கிடையே பள்ளி இடைவேளையில் தகராறு ஏற்பட்ட நிலையில், கீழே விழுந்த மாணவன் உயிரிழந்த விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கப்பல் வாடி என்ற பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை 3 மணி இடைவேளையில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தயாநிதி என்ற மாணவனுக்கும், கோபிநாத் என்ற மாணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சண்டையின் போது கோபிநாத் என்ற மாணவனை தயாநிதி என்ற மாணவன் தாக்கி கீழே தள்ளியதில் கோபிநாத் என்ற மாணவனுக்கு வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அருகில் இருந்த சக மாணவர்கள் இருவரையும் தடுத்துள்ளனர். மேலும் இது பற்றி ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் மாணவன் கோபிநாத்தை மீட்டு பர்கூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து மாணவனின் பெற்றோர் மற்றும் பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த பர்கூர் போலீசார் மாணவன் கோபிநாத் இறப்பு குறித்து மாணவன் தயாநிதி மற்றும் சக மாணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவன் இறப்பு குறித்து தகவலறிந்து வந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.