ஆந்திராவிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் இன்னும் 3 நாட்களில் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட்டிற்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை குடிநீருக்காக தண்ணீர் திறக்கக் கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 9-ஆம் தேதி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆந்திர முதலமைச்சரிடம் கொடுத்து தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தினர்.
அதனைத்தொடர்ந்து, கடந்த மாதம் 10/ஆம் தேதி ஸ்ரீசைலம் அணையிலிருந்து சோமசீலா அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது சோமசீலா அணையிலிருந்து கண்டலேறு அணைக்கு விநாடிக்கு ஆயிரத்து 500 கன அடி நீர் திறக்கபட்டுள்ளது. இந்த நீரை ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் அனில் குமார் யாதவ் திறந்து வைத்தார். இந்த நீர்த்திறப்பு விரைவில் 6 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்படும் என ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோமசீலா அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் 2 நாட்களில் கண்டலேறு அணைக்கு வந்து சேரும் என்றும் அங்கிருந்து சென்னை குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் 3 நாட்களில் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட்டிற்கு கிருஷ்ணா நீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.