‘வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள திமுகவினரை கண்டிக்கிறோம். மலைவாழ் மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோருகிறேன்’ எனக்கூறி அதிமுக வேலூர் புறநகர் மாவட்டத்தின் சார்பில் அணைக்கட்டு பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது... “அணைக்கட்டு பகுதிகளில் திமுகவினர் நிகழ்த்தி வரும் மணல் மற்றும் மண் கொள்ளையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இனியும் தாமதிக்காமல் முதல்வர் இதனை விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபடுவோம்” என்றார்.
தொடர்ந்து ‘ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள அதிமுகவில் எடப்பாடியை தவிர வேறு யாரும் முதல்வர் வேட்பாளர் இல்லையா’ என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்...
“என்னைக் குறித்துதான் அண்ணாமலை அந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார். அரசியல் ரீதியாக அண்ணாமலை பக்குவப்படவில்லை என்று நான் கருதுகிறேன். பிரதமர் வேட்பாளராக பாஜக நரேந்திர மோடியை முன்னிறுத்தி இருக்கிறது, தமிழக மாநில தலைவரும் அதை முன்னிறுத்திதான் பேசி வருகிறார். அவரை நான் கேட்கிறேன், ‘பாஜகவில் இருக்கும் ஆறு கோடி உறுப்பினர்களில் பிரதமர் நரேந்திர மோடியை தவிர வேறு யாருக்கும் பிரதமராகும் தகுதி இல்லையா?’ ” என்றார்.
நரேந்திர மோடியை பிரதமராக முன்னிறுத்துகிறார்கள் என்றால் அவர், கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக உள்ளார். கட்சியின் தலைமை அவரை முன்னிறுத்துவதுதான் அரசியல் நியதி, அதே அடிப்படையில்தான் நான்காண்டு காலம் முதலமைச்சராக இருந்த எடப்பாடியை நாங்கள் முன்னிறுத்துகிறோம்” என்றார்.
ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை கோவில் மற்றும் மண்டபங்களில் ஒளிபரப்பு செய்ய தடை விதித்ததாக பாஜக குற்றம் சாட்டியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “இதை அரசியலாக்க அதிமுக விரும்பவில்லை. அதேசமயம் இந்து அறநிலையத்துறை அமைச்சர் அந்த மாதிரி எதுவும் தடை விதிக்கவில்லை” என்றார்
பின் அண்ணாமலை குறித்து கூறுகையில், “காவல்துறைதான் முன்னால் இருப்பவர்களை மிரட்டுவது போன்று பேசுவார்கள். அப்படி பேசினால்தான் குற்றவாளிகள் பயந்து பதில் சொல்வார்கள். ஆனால் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காவல்துறையில் பணியாற்றிய மனநிலையிலேயே ஊடகங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். அவர் அரசியலை ஊடகத்தில்தான் நடத்திக் கொண்டிருக்கிறார், மக்களிடத்தில் செல்லவில்லை. அண்ணாமலை சொல்கிறார் 300, 400 தொகுதிகளில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராவார் என்று. நான் கேட்கிறேன் இந்த 300 தொகுதியில் தமிழகத்தில் நீங்கள் எத்தனை தொகுதியில் வெற்றி பெறுவீர்கள்? சொல்ல முடியுமா? இதைக் கேட்டால் பதில் இல்லை. உங்கள் தலைமையில் தமிழகத்திலிருந்து எத்தனை பேர் நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள் என்பதை கூறுங்கள்.
அண்ணாமலை நாங்கள் மாய உலகத்தில் இருப்பதாக சொல்கிறார். தேர்தல் வரும்போது தெரியும்... யார் மாய உலகில் இருக்கிறார்கள் என்று. இன்னொன்றையும் அண்ணாமலைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற தான்தோன்றித்தனமான செயல்களில் அவர் சென்றுவிடக் கூடாது. அரசியலில் பக்குவப்பட வேண்டும். ஏதோ அவர் மட்டுமே தூய்மையானவர் என பேசக்கூடாது. ஊழல் கரை எல்லா இடங்களிலும் உள்ளது. அதை எடுத்துச் சொன்னால் தாங்க மாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
அதிமுகவினர் திமுகவினரை கண்டித்து ஒருபுறம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கடந்த ஆட்சியில் அதிமுகவை சேர்ந்த நபர்கள் கல்குவாரி, மண் கொள்ளையில் ஈடுபட்டதாகவும் தற்போது உத்தமர்கள் போல் நடந்து கொள்வதாகவும் திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.