செய்தியாளர் - ஜி.பழனிவேல்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே லக்கமத்தனப்பள்ளி கிராமத்தில் மார்கண்டேயன் ஆற்றில் இருந்து படேதாள ஏரிக்கு செல்லும் பாசன கால்வாய் 57 லட்சம் ரூபாயில் புனரமைப்பு செய்யப்படுகிறது. இப்பணியை அதிமுக துணை பொதுச் செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கேபி.முனுசாமி பூமி பூஜை செய்து இன்று துவங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்...
“கிருஷ்ணகிரியில் பாதயாத்திரையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் நரேந்திர மோடியை காமராஜருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். பிரதமர் மோடி மற்றும் தற்போதுள்ள தலைவர்கள் யாரையும் காமராஜருடன் ஒப்பிட்டு பேச முடியாது. காமராஜர் மிகப்பெரிய கர்மவீரர். மக்களுக்காக வாழ்ந்தவர். சுதந்திர போராட்ட தியாகி. அவருடன் யாரையும் ஒப்பீடு செய்யக்கூடாது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதலீட்டாளர்கள் மாநாடு குறித்தும், தமிழக, உ.பி. நிதி ஒதுக்கீடு பற்றியும் பேசியுள்ளார். நான் அண்ணாமலையிடம் கேட்கிறேன், ஒரே நாடு ஒரே தேசம் என்று சொல்லும் பாஜக தலைவர்கள், எல்லா மாநில முதல்வர்கள் நடத்தும் மாநாட்டில் கலந்துகொண்டு தொழில் முனைவோர்களை அழைத்து ‘இங்கு தொழில் தொடங்குங்கள் பாதுகாப்பான மாநிலம்’ என்று சொல்வீர்களா? அப்படி சொல்லி இருந்தால் உண்மையில் அண்ணாமலை பேசுவதை வரவேற்று இருப்பேன். மாறாக பிரதமர், குஜராத் சென்று தொழில் முதலீட்டாளர்களுடன் பேசி அங்கிருந்து அனுப்புகிறார். நாட்டின் பிரதமர் ஒரு சிறிய வட்டத்திற்குள் அமர்ந்து விடுகிறார். இதைப்பற்றி பேச அண்ணாமலைக்கு தார்மீக உரிமை இல்லை.
திராவிட கட்சிகளால்தான் ஊழல் இருப்பதாக அண்ணாமலை பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 50 ஆண்டுகால ஆட்சியில் குறிப்பாக எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக விளங்கியுள்ளது. பாஜக ஆட்சியில் சிறந்த மாநிலம் என தமிழகம் பல்வேறு சான்றிதழ்களை பெற்றுள்ளது. அதை மறைத்து தான்தோன்றித்தனமாக அண்ணாமலை பேசுவது அரசியல்வாதிகளை விமர்சனம் செய்வது நாகரீகமான அரசியல் இல்லை. எல்லோரையும் குற்றவாளிகளாக பார்க்கும் காவல்துறை போல் பார்க்கிறார் அண்ணாமலை.
ராமர் திருக்கோவில் கும்பாபிஷேகம் பற்றி அரசியல் பேச அதிமுகவிற்கு விருப்பமில்லை. உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவதன் மூலம் முதலமைச்சர் உடல் நலம் கருதி முதலமைச்சர் பதவி கூட உதயநிதிக்கு வழங்கலாம். ஆனால் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் இதனை தூக்கி எறிவார்கள். திமுகவில் உள்ளவர்கள் தற்போது அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அதற்கு காரணம் திமுக மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டார்கள். அதிமுகவின் மீது உள்ள நம்பிக்கையால் இணைகிறார்கள்.
நாடாளுமன்ற கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது முடிந்த பிறகு ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும். தற்போது ஏதும் சொல்ல முடியாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கருணையால் அமைச்சராக இருந்த பன்னீர் செல்வம் முதலமைச்சரானார். இந்த இயக்கத்தின் நலனில் அக்கறை காட்டாமல் சுயநலத்திற்காக செயல்பட்டதால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் கட்சிக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு தொல்லை கொடுத்து வருகிறார்.
தொண்டர்கள் இல்லாத இயக்கத்தை மீட்போம் என ஓபிஎஸ் பேசுவது வேடிக்கையாக உள்ளது. தமிழக வெள்ள பாதிப்புகளுக்கு பிரதமர் ஏற்கனவே நிதி ஒதுக்கி விட்டதாக தெரிவித்துள்ளனர். பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறது. என்பதுதான் எதார்த்தமான உண்மை” என்றார்.