கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் இதுவரை 1589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 600 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6006 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் சென்னையில் மட்டும் நேற்று 399 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தம் 3043 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் இதுவரை 1589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தெரிவித்துள்ள அதிகாரிகள், இன்னும் சில தினங்களில் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தொடும். கோயம்பேட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றவர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் எண்ணிக்கை உயர்வதற்கும் கோயம்பேடு மார்க்கெட் தொடர்பு தான் காரணம் என தெரிய வந்துள்ளது. தனிமனித இடைவெளி பின்பற்றப்படாததே இதற்கு காரணம். கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்புடைய 1300 பேர் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளனர்