சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், சின்ன வெங்காயம் விலை கடந்த வாரத்தைவிட இருமடங்கு உயர்ந்து இருப்பதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தரத்தின் அடிப்படையில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, முதல் ரக சின்ன வெங்காயம் ரூ. 120-க்கும் இரண்டாவது ரகம் ரூ. 90-க்கும் 3வது ரகம் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடந்த வாரம் முதல் ரக சின்ன வெங்காயம் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் 2 மடங்காக விலை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு சின்னமனூர், ஒட்டன்சத்திரம், அரியலூர், பெரம்பலூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இரந்து வரும் சின்ன வெங்காயம் வரத்து குறைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சின்ன வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகையொட்டி, வெங்காயம் விலை உயர்வுடன் காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர இருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.