கோவை மாவட்ட தூய்மை பணியாளர்கள், கோவை மாவட்ட ஆட்சியருடன் நடத்திய பேச்சு வார்த்தையில் கோரிக்கைகள் தொடர்பாக உத்தரவாதம் வழங்கப்படாததால் வேலை நிறுத்தம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.
10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசாணைப்படி கூலி வழங்க வேண்டும் போன்ற 18 கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் காலை முதல் கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பணிகளைப் புறக்கணித்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜி எஸ் சமீரனுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் தொடர்பாக உத்தரவாதம் அளிக்கப்படவில்லை எனத் தூய்மை பணியாளர் நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், '' கோவை மாவட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிப்பு கோருவதாகவும், அதிகாரிகள் எங்களை அந்த நிலைக்குத் தள்ளியுள்ளனர் எனவும் தெரிவித்தனர். 18 கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் வைத்ததாகவும்,
கோரிக்கைகள் நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர் கால அவகாசம் கேட்டுள்ள நிலையில் ஒரு சில கோரிக்கைகள் அரசு கொள்கை முடிவாக உள்ளதாக ஆட்சியர் தெரிவித்ததாகக் கூறினர். மேலும் போராட்டம் தொடரும் எனவும், அரசாணை வெளியிடப்பட்ட அடிப்படையில் கூலி வழங்கப்படும் என்கிற உத்திரவாதம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். எழுத்துப் பூர்வமாகக் கோரிக்கைகள் தொடர்பாக உத்திரவாதம் அளிக்கப்பட்ட பின்னர் போராட்டம் கைவிடுவது தொடர்பாக முடிவு செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளனர்.