செய்தியாளர்: எழில் கிருஷ்ணா
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதியை ஆதரித்து அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் நேற்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்...
“‘இந்தியாவா...’ என்று சொல்லி வந்த உலக நாடுகள், தற்போது ‘ஓ இந்தியாவா’ என்று கூறும் நிலைக்கு வந்துள்ளது. ஆனால் இங்கே தமிழ்நாடு முதலமைச்சர் நாள்தோறும் பொய்களைச் சொல்லி வருகிறார். 2019ல் இந்த பூனை பாலை குடித்து ருசி கண்டுள்ளது. மோடி தமிழ்நாட்டிற்கு எதிரானவர் என பொய்யை சொல்லி மக்களின் எண்ணங்களை மாற்றி ஜெயித்தார்கள். தற்போது மீண்டும் அந்த பூனை பாலை குடிப்பதற்காக வருகிறது. மக்கள் ஏமாறக் கூடாது.
தமிழ்நாட்டில் பள்ளிகளில் கொடுக்கப்பட்டு வந்த இலவச லேப்டாப் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இலவச சைக்கிள்களை முறையாக கொடுப்பதில்லை. எதுவெல்லாம் நல்ல திட்டங்களோ அதையெல்லாம் நிறுத்தி விட்டார்கள்.
சமூகநீதி, பெண்ணுரிமை பேசும் முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மகனை மட்டும் அமைச்சராக்கினார். அவரது மகளை கொண்டு வரவில்லை. முதலமைச்சர் வீட்டில் கூட பெண் குழந்தைக்கு சமூக நீதி இல்லை. ஆனால், மோடி அரசில் 11 பெண் அமைச்சர்கள் இருக்கிறார்கள்” என்று பேசினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், “தமிழ்நாடு பிடித்திருப்பதால் இன்னமும் பலமுறை மோடி வருவார். 2021ல் செங்கல்லை காண்பித்து உதயநிதி வாக்கு கேட்டார். முதல் கையெழுத்து நீட்டுக்காக போடுவதாக 2021ல் ஏமாற்றியுள்ளார்.
தமிழர்களே இல்லாத இடத்திற்குச் சென்றாலும் தமிழ் மொழியை பிரதமர் பேசி வருகிறார். குப்பையில் வைத்திருந்த செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்து தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றி இருக்கிறார் பிரதமர்” என பெருமிதம் தெரிவித்தார்.