செய்தியாளர்: ரகுமான்
புதுச்சேரி பாஜக மகளிர் அணி சார்பில் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி பாஜக தலைவர் செல்வ கணபதி எம்பி, நியமன சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மீண்டும் மோடியின் தலைமையில் ஆட்சி:
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “புதுச்சேரியில் கடந்த 3 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசின முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் மிகச்சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்தியா முழுவதும் பிரதமர் மோடியின் ஆட்சியை முன்னிறுத்தி வாக்கு கேட்கும் ஒரே கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி மட்டும் தான். மீண்டும் பிரதமராக நரேந்திரமோடி தான் ஆட்சி அமைக்கப் போகிறார்.
400 எம்பி இலக்கு என்ற பயணத்தில் நாங்கள் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றோம். தமிழகத்தில் 2019-ல் மோடி எதிர்ப்பலையை உருவாக்கி அதன் வாயிலாக எல்லா இடங்களையும் வெற்றி பெற்றனர். இப்போது தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். ஏற்கெனவே இருந்த நிலைமை இப்போது இல்லை. தற்போது பெருமளவு மாறியிருக்கிறது. மோடி தமிழகத்தில் தங்கி வாக்கு சேகரித்தாலும் பா.ஜ.க வெற்றி பெறாது என்று உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், கிராமங்களில் கூட மோடியை நன்றாக தெரிந்திருக்கிறது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒற்றை செங்கல்லை தூக்கிக்கொண்டு சுற்றி வருகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் ரத்துக்கு போடுவதாக கூறினார். இன்று அதெல்லாம் செய்ய முடியவில்லை. எப்படியோ ஆட்சிக்கு வந்து அமர்ந்துள்ளீர்கள். உங்களை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக இருக்கின்றனர். சீமான் எப்படி கதை சொல்வார் என்பது தெரியும். பாஜக எங்குள்ளது என்று கேட்டவர்கள் எல்லாம் தற்போது பா.ஜ.கவை திட்டினால் தான் அரசியல் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பாஜகவை பற்றிதான் பேசுகின்றனர். சீமான் தினமும் பாஜகவைதான் திட்டிக் கொண்டிருக்கிறார். பா.ஜ.கவில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு கட்சி வேட்பாளரை நிறுத்த பல்வேறு காரணங்கள் இருக்கிறது.
ஆளில்லாமல் நாங்கள் முன்னாள் ஆளுநரையோ, மத்திய அமைச்சரையோ நிறுத்தவில்லை. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். வெற்றி வாய்ப்பு எங்களுக்கு தான் இருக்கிறது” என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.