கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணத்தை சுற்றுலா பயணிகளிடம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோட்டாட்சியர் எச்சரித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இயங்கி வரும் தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள், சுற்றுலா பயணிகளிடம் முறையற்ற வகையில் 3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக தொடர் புகார் எழுந்தது. இதனையடுத்து கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் விடுதிகளைப் பற்றி புகார் கொடுக்க, எல்லா விடுதிகளிலும் அரசின் புகார் எண் 9489650093 அச்சிடப்பட்டு ஒட்டப்படவுள்ளது.
அதன்படி கூடுதல் கட்டணம் தொடர்பாக புகார் வரும் வந்தால், விடுதிகள் மற்றும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொடைக்கானல் கோட்டாட்சியர் எச்சரிக்கை செய்துள்ளார்.
கோடைக்காலம் மற்றும் பள்ளிகள் விடுமுறை காலம் என்பதால், வெயிலின் தாக்கத்தை சமாளிக்க, மக்கள் குடும்பமாக கொடைக்கானல் மற்றும் ஊட்டி பகுதிகளில் குவிந்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி அங்கிருந்து தங்கும் விடுதிகள் மற்றும் உணவங்கள் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கின்றன. இதுதொடர்பாக பலமுறை புகார்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இந்நிலையில் அரசு சார்பில் கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.