கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனர்.
மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வெகுவாக உயர்ந்துள்ளன. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான பூண்டி நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவான 3231 மி.கன அடியில் தற்போது 2973 மி.கன அடியாக அதிகரித்துள்ளது.
35 அடி உயரத்தில் 34.47 அடியை நெருங்கி உள்ளது. ஒதப்பை தரைப்பாலத்தின் கீழே தண்ணீர் தொட்டு செல்வதால் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, சீத்தஞ்சேரி, கூனிப்பாளையம், கச்சூர், தேவந்தவாக்கம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை, ஆந்திராவுக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் அவதியடைந்துள்ளனர். மாற்றுப் பாதையாக பெரியபாளையம், வெங்கல், சீத்தஞ்சேரி வழியாக 40 கி.மீ. சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே கரையோரமாக வசிக்கும் நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம். ஒதப்பை. நெய்வேலி, எறையூர். பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம். திருக்கண்டலம். ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம். கன்னிப்பாளையம், சீமாவரம். வெள்ளி வாயல்சாவடி, நாப்பாளையம், மணலி. மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணுர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறும் அதே சமயம் ஆற்றில் ஆர்பரித்து செல்லும் தண்ணீரை பார்க்க அருகில் செல்லவோ செல்பி எடுக்கவோ கூடாது எனவும் திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.