கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விமரிசையாக நடைபெறாத திருவிழா இந்த ஆண்டு நடைபெற தொடங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது இதனைத் தொடர்ந்து சித்தரை 6ஆம் தேதி இரவு ஏழு மணிக்கு சுவாமி திருக்கண் திறந்ததல் நிகழ்ச்சி நடக்கிறது. அப்பொழுது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் திருநங்கைகள் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டு அரவாணை கணவனாக ஏற்று அன்று இரவு முழுவதும் ஆடி பாடி மகிழ்வார்கள். மறுநாள் சித்திரை 07ஆம் தேதி புதன்கிழமை காலை ஆறு மணிக்கு தேரோட்டம் துவங்கி பந்தலடி சென்று அங்கு அழுகளம் நிகழ்ச்சியில் திருநாங்கைகள் தங்கள் அணிந்திருந்த தாலியை அறுத்து, வளையல்களை உடைத்து, ஒப்பாரி வைத்து விதவை கோலம் பூண்டு சொந்த ஊருக்கு செல்வார்கள்.
இன்று முதல் திருநங்கைகள் அழகிப்போட்டி 'மிஸ் கூவாகம்' நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் திருநங்கைகள் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விழுப்புரத்தில் முகாமிட்டுள்ளனர்.சமூகத்தில் மூன்றாம் பாலினமாக கருதப்படும் திருநங்கைகள் இந்த திருவிழாவை வெகுவிமரிசையாக கொண்டாடுவது வழக்கம். விழுப்புரத்தில் விடுதிகளில் தங்கியுள்ள திருநங்கைகள் முக அலங்காரம்,சிகை அலங்காரத்துடன் வீதிகளில் உலா வருவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருப்பது தங்களுக்கு வருத்தம் அளித்ததாகவும். இந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்ளுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் திருநங்கைகள் தெரிவிக்கின்றனர். மேலும் சமூகத்தில் தங்களை மூன்றாம் பாலினமான கருதி தங்கள் மீது அரசு மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், அரசு பல்வேறு நலத்திட்டங்களை தங்களுக்காக வழங்குவதாகவும், புதிய அறிவிப்புகளை வெளியிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
அரசியல் ரீதியாக திருநங்கைகளுக்கு போதிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்பதும் அவர்களுடைய ஆதங்கமாக இருந்து வருகிறது. மேலும் தமிழக அரசு தமிழகத்தில் சேலம்,மதுரை,சென்னை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் திருநங்கைகளுக்கான சிகிச்சை என்ற தனிப் பிரிவாக உள்ளது. இந்த பிரிவில் அவர்களுக்கான அனைத்து சிகிச்சை முறைகளும் வழங்கப்பட்டு வருவதாக விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பொற்கொடி தெரிவித்திருந்தார். இது ஒருவகையில் திருநங்கைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள் .