கொடநாடு காவலாளி கொலை வழக்கில் பரபரப்பு திருப்பங்கள்

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் பரபரப்பு திருப்பங்கள்
கொடநாடு காவலாளி கொலை வழக்கில் பரபரப்பு திருப்பங்கள்
Published on

கொடநாடு பங்களா காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட கனகராஜ் மற்றும் அவரது நண்பர் சயான் ஆகிய இருவரும் வெவ்வேறு இடங்களில் சாலை விபத்தில் சிக்கினர். இதில் கனகராஜ் உயிரிழந்தார். சயான் கோவை மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். இந்த சம்பவங்களால் காவலாளி கொலை வழக்கில் தொய்வு ஏற்படும் என்றே தோன்றுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா காவலாளி ஓம் பகதூர், ஏப்ரல் 24 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் போலீஸ் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இவ்வழக்கில் ஜெயலலிதாவிடன் கார் ஓட்டுநராக பணியாற்றிய கனகராஜ் மற்றும் அவரது நண்பர் சயான் உள்ளிட்டோரை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை சேலம் அருகே நடந்த சாலை விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். மேலும் சயான் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கோவையிலிருந்து கேரளாவிற்கு காரில் சென்ற பொழுது சாலை விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் சயானின் மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்தனர். சயான் படுகாயங்களுடன் கேரளா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுயநினைவை இழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் இருவர், ஒரே நாளில் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் சாலை விபத்தில் சிக்கியது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துகள், இயல்பாக நடந்ததா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டவையா என்பது குறித்து போலீஸாரின் விசாரணையில் தெரியவரும். தேடப்பட்டோரில் முக்கியமானவர்களான கனகராஜ் மற்றும் சயான் இருவரும் விபத்தில் சிக்கியதால், இந்த கொலை வழக்கில் அடுத்தகட்ட விசாரணை போலீஸாருக்கு சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com