கோடநாடு வீடியோ விவகாரம் - சயான், மனோஜை சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வீடியோ விவகாரத்தில், குற்றம்சாட்டப்பட்ட சயான், மனோஜ் இருவரையும் தமிழக போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் பணியாளர்கள் மரணம் தொடர்பாக தெஹல்கா ஊடகத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு வீடியோவை அண்மையில் வெளியிட்டார். இது வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியது. அந்த வீடியோவில் மேத்யூஸ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தன்னை அவமானப்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளதாக பத்திரிகையாளர் மேத்யூஸ் உள்ளிட்டோர் மீது முதல்வர் பழனிசாமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், உடனடியாக டெல்லி விரைந்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான் மற்றும் மனோஜை தமிழக போலீசார் டெல்லியில் கைது செய்து தமிழகத்திற்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில், சயான் மற்றும் மனோஜ் இரு வரையும் மத்திய குற்ற பிரிவு போலீசார் இன்று மாலை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதி சரிதா முன்னிலையில் ஆஜர் படுத்தினர். அப்போது, “என்னென்ன பிரிவுகளின் பேரில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளீர்கள்?, அவர்களது பேட்டியால் எங்கு கலவரம் ஏற்பட்டது? அரசுக்கு என்ன பிரச்னை ஏற்பட்டது?. சயான், மனோஜ் ஆகியோர் மீது புகாரளித்தவர்களிடம் விசாரணை நடத்தினீர்களா?” என போலீசாரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
கைது செய்யப்பட்ட சயான், மனோஜை சிறையில் அடைக்க நீதிபதி சரிதா மறுப்பு தெரிவித்துவிட்டார். வழக்குப் பதிவு மீதான சந்தேகங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே காவலில் அனுப்ப முடியும் என்று அவர் கூறினார். இதனையடுத்து, தங்கள் தரப்பு வழக்கறிஞர் யார் என நீதிபதி கேட்டதற்கு, டெல்லியில் இருந்து வழக்கறிஞர்கள் வருவார்கள் என சயானும் மனோஜும் பதில் அளித்தனர். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதனிடையே, கோடநாடு விவகாரம் மூலம் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோடநாட்டில் கொலை, கொள்ளை நடந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. அரசியல் ரீதியாக எங்களை எதிர்க்க சக்தியற்றவர்கள் இதைக் கையில் எடுத்துள்ளனர். கோடநாடு விவகாரம் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள், அது நடக்காது” என்றார்.