நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக இருந்த கோடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் அங்கிருந்த சில பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. இவ்வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், உதயன் உள்ளிட்ட 10 பேர் ஏப்ரல் 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு பல்வேறு திருப்பங்களைக் கடந்து 5 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தின் ஜாய் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினார். அதேபோல் அரசு தரப்பு வழக்கறிஞரான ஷாஜகான், கனகராஜ் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞரான விஜயன், முனிரத்தினம் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வாதிடுகையில், “கோடநாடு கொலை வழக்கில் கொலை நடந்த இரண்டு மூன்று நாட்களில், சேலத்தில் இறந்து போன முதல் குற்றவாளி கனகராஜின் செல்போனிற்கு 7ம் எண்ணில் தொடங்கும் வெளிநாட்டு அழைப்பில் இருந்து, 5 முறை அழைப்பு வந்துள்ளது. இது குறித்து இன்டர்போல் காவல் துறை உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் வெளி மாநிலத்தில் விசாரணை உள்ளிட்ட பல்வேறு தரப்பு விசாரணை நடைபெற்று வருவதால் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிடவேண்டும் என்று எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் கோருவது விசாரணையை பாதிக்கும்” என்று கூறினார்
இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார்.
எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் கொலை சம்பவம் நடந்த கோடநாடு எஸ்டேட்டை பார்வையிட வேண்டும் என்ற மனு மீது வருகிற ஜூலை 26 ம் தேதி விசாரணை நடைபெறும் என தெரிகிறது.