கொடைக்கானலில் நான்கு மாதங்களுக்குப் பிறகு பூங்காக்கள், படகு இல்லங்கள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் இன்று திறக்கப்பட்டன.
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கொரோனா தொற்று பரவல் குறைந்த காரணத்தால் கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொடைக்கானல் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் சாலை போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட நிலையில், மலைப்பகுதியின் குளிர்ச்சியை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் கொஞ்சம் கொஞ்சமாக வரத்துவங்கினர். ஆனால், சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று முதல் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்யவும், பூங்காக்களில் ஓய்வு எடுத்து குழந்தைகளை மகிழ்விக்கவும், பசுமை பள்ளத்தாக்கு மற்றும் கோக்கர்ஸ் பள்ளத்தாக்கு பகுதிகளை பார்வையிடவும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் செய்பவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் நம்பிகையோடு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.