கொடைக்கானல் மன்னவனூர் எழுபள்ளம் ஏரி குடிமராமத்து பணிக்கு 95 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் கிராமத்தில் உள்ள எழுபள்ளம் ஏரியை குடிமராமத்து செய்ய, தமிழக அரசு 95 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியது. இந்நிலையில் விவசாசாயிகளின் ஆயக்கட்டு குழு மூலமாக குடிமராமத்து செய்ய வேண்டும் என்ற விதியை மீறி, பணி செய்வதில் அதிமுக அரசியல்வாதிகள் தலையீடு இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் உள்ளூர் மக்கள் நீதிமன்றத்தை நாடி பணிகளை நிறுத்தினர். பின்னர் பாசன வசதி பெறும் விவசாயிகளை வைத்து, சார் ஆட்சியர் முன்னிலையில் வாக்கெடுப்பு நடத்தி குழு அமைத்து பணிகளை துவக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவு இன்று வரை அமல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவுபடி எழுபள்ளம் ஏரி பாசன ஆயக்கட்டு விவசாயிகள் குழுவை அமைத்து, எந்தவித ஊழலும் இன்றி, ஏரியை குடிமராமத்து செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.