“ஒருபுறம் அமைதிப் போராட்டம்; மறுபுறம் சிகிச்சை” - வழக்கம்போல் இயங்கிய கே.எம்.சி

“ஒருபுறம் அமைதிப் போராட்டம்; மறுபுறம் சிகிச்சை” - வழக்கம்போல் இயங்கிய கே.எம்.சி
“ஒருபுறம் அமைதிப் போராட்டம்; மறுபுறம் சிகிச்சை” - வழக்கம்போல் இயங்கிய கே.எம்.சி
Published on

மேற்குவங்க மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்ற போதிலும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் கடந்த 10ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் சிகிச்சை அளித்த பயிற்சி மருத்துவர்களை கடுமையாக தாக்கினர். இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, அடுத்த நாளே முதல் மேற்கு வங்க மருத்துவர்கள் போராட்டத்தில் களமிறங்கினர். அவர்களுக்கு இந்திய மருத்துவ சங்கம் முழு ஆதரவை தெரிவித்துள்ளது.

இதையடுத்து தொடர்ந்து 7வது நாளாக இன்று மேற்கு வங்க மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது. அதன் எதிரொலியாக இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். அதே சமயம் அவரச சிகிச்சைப் பிரிவு வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

சென்னை பொருத்தவரை பல தனியார் மருத்துவமனைகள் போராட்டத்தால் செயல்படவில்லை. அரசு மருத்துவமனைகளை பொருத்தவரையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆகியவை போராட்டத்தில் இறங்கின. 

இந்நிலையில், மருத்துவர்கள் போராட்டம் மற்றும் நோயாளிகளின் நிலைகுறித்து அறிந்துகொள்ள சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு புதிய தலைமுறை இணையதளம் சார்பில் சென்றோம். அங்கு நோயாளிகள் எந்தச் சிரமத்திற்கும் ஆளாகாமல் சிகிச்சை பெற்றுச் சென்றனர். மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்துகொண்டு வழக்கம் போல் பணிகளை செய்துகொண்டிருந்தனர். மருத்துவமனை எப்போதும் போல, இயல்பாகவே காணப்பட்டது. புறநோயாளிகளுக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையின் முதல்வர் வசந்தாமணியை நேரில் சந்தித்தோம். அவரிடம் போராட்டத்தின் நிலை மற்றும் மருத்துவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக கேள்விகளை முன்வைத்தோம். அதற்குப் பதிலளித்த முதல்வர் வசந்தாமணி, “மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது. மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதலாக காவல்துறையினரை பணியில் ஈடுபடுத்தி பாதுகாப்பு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். நோயாளிகளுடன் உறவினர்கள் இரண்டு பேர் மட்டுமே உதவியாளர்களாக அனுமதிக்கப்பட வேண்டும். அனுமதியில் கூடுதல் கட்டுப்பாடுகள் வேண்டும். கே.எம்.சி-யை பொறுத்தவரையில் மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்து அமைதிப் போராட்டம் நடத்துகிறார்கள். மற்றபடி, அனைத்து நோயாளிகளுக்கும் வழக்கம்போல் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது” என்று கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com