தமிழ்நாட்டின் கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினம் இன்று. தன்நலம் கருதாது மக்கள் நலம் பேணிய மகத்தான பெருந்தலைவர் ஆற்றிய சேவைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
இடைநிலைக் கல்வியைக் கூட எட்டாத காமராஜர் என்ற மாமனிதர் தான், மாணவர்கள் யாரும் வறுமையால் கல்வியில் இடை நிற்றல் கூடாது என்பதற்காக மதிய உணவு என்ற மகத்தான திட்டத்தை உருவாக்கியவர். ஒரு முறை தனது அமைச்சரவையை கூட்டி ஆலோசித்த காமராஜர், மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க ஒரு வழி செய்ய வேண்டும் என்று கொண்டு வந்தது தான் மதிய உணவு திட்டம். அது இன்றும் தொடர்கிறது, பேசப்படுகிறது.
காமராஜர் 1903ஆம் ஆண்டு இதே நாள் விருதுநகரில் பிறந்தார். 12 வயது வரை பள்ளிக்கு சென்ற அவர், தந்தை இறப்பிற்கு பிறகு தாய்க்கு உதவ துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு வேலை செய்தபோது 16 வயதில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
சுதந்திரத் தீ நாடெங்கும் பற்றி எரிந்த நேரத்தில் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்க அறிவிப்பின்பால் ஈர்க்கப்பட்டு போராட்டக் களம் பல கண்டார். சிறையும் சென்றார். எட்டாண்டுகள் சிறைவாசம் முடித்து வந்தவர் காங்கிரஸ் இயக்கத்தின் மாநிலத் தலைவரானார்.
1940 தொடங்கி 14 ஆண்டுகள் அப்பொறுப்பை வகித்த காமராஜர், 1954ஆம் ஆண்டு தமிழக முதல்வரானார். எட்டு பேரைக் கொண்ட சின்னஞ்சிறிய அமைச்சரவை கொண்டு இம்மாநிலத்தில் அவர் ஆற்றிய பணிகள் இன்றும் அவர் பெயர் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆழியாறு-பரம்பிக்குளம், மணிமுத்தாறு, வைகை என அணைக்கட்டுகள் பல கட்டிப் பாசன வசதி செய்து விவசாயம் செழிக்கச் செய்தார்.
என்எல்சி, ஐசிஎஃப் போன்றவற்றை கொண்டு தந்ததன் மூலம் தொழில்துறை வளர்ச்சிக்கும் வித்திட்டார். மாநிலம் முழுவதும் அவர் புதிய பள்ளிக்கூடங்களை கட்ட நடவடிக்கை எடுத்ததோடு, ஏற்கெனவே இருந்த பள்ளிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு அவற்றின் தரத்தை உயர்த்தவும் அரும்பாடுபட்டார். நாட்டின் தலைமைப் பொறுப்பிற்கு லால் பகதூர் சாஸ்திரி, அதன் பின்னர் இந்திரா காந்தி ஆகிய இருவரைக் கொண்டு வந்து கிங்மேக்கர் என்ற அடைமொழியைப் பெற்றவர் காமராஜர்.
காலமெல்லாம் கதர் அணிந்து மக்கள் பணி ஆற்றிய அந்த மாபெரும் தலைவர் 1975 ஆம் ஆண்டு தன்னை ஆட்கொண்ட தலைவனின் பிறந்த நாளையே தனது நினைவு நாளாக்கிச் சென்றார். இவரது மறைவுக்கு பிறகு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி காமராஜரை கவுரவித்தது. காலங்கள் கடந்தாலும், தலைமுறைகள் மாறினாலும் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் பெருந்தலைவர் காமராஜர் என்பதே நிதர்சனம்.