இவர்தான் மக்கள் தலைவர் ! காமராஜர் பிறந்த தினம் இன்று

இவர்தான் மக்கள் தலைவர் ! காமராஜர் பிறந்த தினம் இன்று
இவர்தான் மக்கள் தலைவர் ! காமராஜர் பிறந்த தினம் இன்று
Published on

தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்திய கர்ம வீரர் காமராஜரின் பிறந்தநாள் இன்று. அரசியல் வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக வாழ்ந்த அந்த ஒப்பற்றத் தலைவர் பற்றி தெரிந்து கொள்வோம்.

சிறுவயதிலேயே தந்தையை இழந்த காமராஜரால் பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. சிறுவனாக இருக்கும்போதே டாக்டர் வரதராஜூலு நாயுடு, கல்யாண சுந்தரம், ஜார்ஜ் ஜோசப் போன்ற தலைவர்களின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு அரசியலிலும், சுதந்திரப் போராட்டத்திலும் அதிக ஈடுபாடு காட்டினார். நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டு சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முழு நேர ஊழியரான காமராஜர், படிப்படியாக அரசியலில் வளர்ந்து 1954-ல் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். அன்று முதல் தமிழகத்தின் பொற்காலம் தொடங்கியது. முதலமைச்சராக பதவியேற்ற பின் காமராஜர் ஆற்றிய முதல் பணி, ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை ஒழித்துக்கட்டியது. அவரால் மூடப்பட்ட 6 ஆயிரம் பள்ளிகளையும் திறந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 7 சதவிகிதமாக இருந்த கல்வி கற்போரின் எண்ணிக்கை 37 சதவிகிதமாக உயர்ந்தது.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவரின் குழந்தைகளை பள்ளிக்கு வரச்செய்ய 1956-ல் இலவச மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். சீருடைத் திட்டம் எனும் சீரிய திட்டத்தையும் கொண்டுவந்து மாணவர்களிடையே ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடு களைய வழிவகுத்தவர் காமராஜர். கல்வியில் மட்டுமின்றி தொழில் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள் எனப் பல்வேறு துறைகளிலும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தார்.

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார் காமராஜர். மதம் மக்களுக்குச் சோறுபோடுமா? மதம் மனிதனை பயமுறுத்தி வைத்திருக்கிறதே தவிர தன்னம்பிக்கையை வளர்த்திருக்கிறதா? என்றெல்லாம் சாடுவார். பெரியார் இல்லையென்றால் நம் பிள்ளைகளின் கதி என்னவாகியிருக்கும் என அடிக்கடி குறிப்பிடுவார். இப்படி, மக்களை சிந்திக்க வைப்பது ஒரு புறம், சேவை மறுபுறம் என காமராஜரின் பணி தொடர்ந்தது.

லால் பகதூர் சாஸ்திரியையும், இந்திரா காந்தியையும் பிரதமராக உருவாக்கியதால் கிங் மேக்கர் என்றழைக்கப்பட்டார். இருப்பினும் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை கொண்டுவந்த போது அதனை கடுமையாக எதிர்த்தவர்களில் காமராஜரும் ஒருவர்.

தமிழ்நாடு இதுவரை கண்டிராத திட்டங்களை எல்லாம் தந்திருந்தபோதிலும் 1967 சட்டமன்றத் தேர்தலில் சொந்த ஊரான விருதுநகர் தொகுதியிலேயே திமுக வேட்பாளர் சீனிவாசனிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார்.

சமூகத் தொண்டாற்றுவதை மட்டுமே பெரிதாகக் கருதி வாழ்ந்த இவர், கடைசிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோதும் கடைசி வரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்தவர். அரசியலில் முன்னுதாரணமாக வாழ்ந்த காமராஜர், இன்றளவும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com