மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தினராலே கைவிடப்பட்ட இருவர், கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற்றுள்ளனர். இது அங்கு சிகிச்சையில் உள்ளவர்கள் மற்றும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளது.
கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த ஒருவர் மாதம் 60,000 சம்பாதிக்கும் மேலாளர் பணிக்கு தேர்வாகியுள்ளார். போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆங்கிலோ இந்தியனான மற்றொருவரோ குடியில் இருந்து மீண்டு காபி ஷாப்பில் வேலைக்கு செல்கிறார்.
இவர்களில் ஒருவரான 29 வயதாகும் ஜேம் சேவியர், ஏழாம் வகுப்பு படிக்கும் போது தன் நண்பர்களுடன் இணைந்து மது குடிக்க பழகியுள்ளார். தொடர்ச்சியாக நாள்தோறும் மது குடிக்க பழகியதால் ஜேம், பள்ளி படிப்பை தொடர முடியாமல் போயுள்ளது. மேலும் `குடிக்க பணம் வேண்டும்’ என குடும்பத்தினரிடம் நாள்தோறும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார் ஜேம்.
குடிப்பழக்கத்தில் இருந்து திருத்த முடியாத நிலையில் ஜேமின் தந்தை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் குடிப்பழக்கத்தில் இருந்து மீளவும் சமூகத்துடன் ஒட்டுறவு கொள்வதற்காகவும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களாக மனநலம் மற்றும் போதைப் பழக்கத்தில் இருந்து மீள்வதற்கான சிகிச்சை பெற்று வந்த ஜேம் தற்போது எழும்பூரில் உள்ள தனியார் காபி ஷாப்பில் பணி புரிகிறார்.
மற்றொருவரான மகேந்திரன் என்பவர், சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். இவருக்கு அதிகப்படியான கோபம் மற்றும் மன அழுத்தம் பெரிய பாதிப்பாக இருந்தது. பி.காம், எம்.பி.ஏ படித்திருந்தாலும் கோபம் மற்றும் எரிச்சல் பெரிய பாதிப்பாக இருந்தது. இதனால் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த மகேந்திரனுக்கு பை-போலார் எபெக்ட் டிஸ்ஆர்டர் எனப்படும் மன ரீதியான பிரச்சினை இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் அதற்கான சிகிச்சையும் மற்றும் மருந்துகளும் தொடர்ச்சியாக எடுத்து கொண்ட நிலையில், தற்போது உணவுத் தரம் குறித்து பரிசோதனை செய்யும் தனியார் நிறுவனத்தில் 60,000 சம்பளத்திற்கு மேலாளராக ஆகும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
ஜேம் சேவியர் மற்றும் மகேந்திரனுடன் சேர்ந்து 25 நபர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தில் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் வேலைக்கு செல்லும் அளவிற்கு நல்ல நிலையில் உள்ளனர். ஜேம் மற்றும் மகேந்திரன் ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக உள்ள நிலையில், குடும்பத்தால் கைவிடப்பட்ட இவர்களுக்கு கீழ்பாக்கம் மன நல காப்பகம் அரவணைக்கும் இல்லமாகவும், அங்குள்ள பணியாளர்கள் நண்பர்களாகவும், உறவினர்களாகவும் கிடைத்துள்ளனர். மறுவாழ்வு கிடைத்துள்ள இவர்கள் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்திற்கு நன்றி கடன் பட்டுள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
- ந.பால வெற்றிவேல்