சொத்தை பறித்துக் கொண்டார்கள் நிற்கதியாக நிற்கிறோம் எங்களை கருணைக் கொலை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வயதான தம்பதியர்கள் மனு அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சின்ன பொன்னேரி பகுதியில் வசிப்பவர் கோவிந்தராஜ் (67). இவருடைய மனைவி அம்சா (60). இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ள நிலையில், கோவிந்தராஜ் தனக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலத்தையும் 3 வீடுகளையும் பாகப்பிரிவினை செய்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில், அவருடைய கடைசி மகன் முரளி என்பவர் தனக்குச் சொந்தமான வீட்டை விற்றுவிட்டு தனது தந்தை கோவிந்தராஜ்க்கு சொந்தமான வீட்டின் பத்திரத்தை எடுத்துக் கொண்டு, எழுதப் படிக்கத் தெரியாத கோவிந்தராஜையும் அவரது மனைவியையும் ஏமாற்றி எழுதி வாங்கிக் கொண்டு அடித்து உதைத்து இருவரையும் வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார்.
தற்பொழுது நாங்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்து பிழைத்து வருகிறோம். வயதான காலத்தில் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். இது சம்பந்தமாக பலமுறை புகார் அளித்தும் துறை சார்ந்த அதிகாரிகள் என்னுடைய மகன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தயவு செய்து எங்களை கருணைக் கொலை செய்யுங்கள் என்று ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இந்த மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் குஷ்வாஹா இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவியிடம் உறுதி அளித்தார்.