சென்னையில் கடத்தப்பட்ட 7 மாத ஆண் குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டனர். அத்துடன் குழந்தையை கடத்திய பெண்ணையும் கைது செய்தனர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் ஜானே போஸ்லே- ரந்தோஷ் தம்பதி. இவர்களுக்கு ஜான் என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளது. சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பில் தங்கி பலூன் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களின் குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி, கடந்த 12-ம் தேதி அடையாளம் தெரியாத 23 வயது பெண் ஒருவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு குழந்தைக்கு ஆடை மாற்ற வேண்டும் எனக்கூறி தம்பதிகளை ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு, குழந்தையை அந்த பெண் கடத்திச் சென்றார். இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் தம்பதியினர் புகார் செய்தனர். போலீசார் மருத்துவமனை வளாக சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தபோது குழந்தையை அப்பெண் கடத்திச் செல்வது தெரிந்தது.
இதையடுத்து பூக்கடை காவல்துறை துணை ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அந்த பெண் செல்லும் வழி முழுவதும் உள்ள 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் அந்தப் பெண், குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து எழும்பூர் காந்தி இர்வின் மேம்பாலம் வரை செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அந்த பெண் நடந்து செல்லும் அனைத்து சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வரை சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, அந்த பெண் கடத்திய குழந்தையுடன் மருத்துவமனைக்குள் செல்லும் காட்சிகள் கிடைத்தது. அதனை வைத்து போலீசார் அங்கேயே காத்திருந்தனர். இன்று அந்த பெண் கடத்திய குழந்தையுடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள் வந்துபோது மடக்கி பிடித்தனர். அத்துடன் குழந்தையை பத்திரமாக மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.
குழந்தையை கடத்திய பெண் யார் என்பது குறித்த விவரங்களை, விசாரணைக்கு பிறகு தெரிவிப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தன்னுடைய குழந்தைதான் என்று பெற்றோரும் அடையாளம் காட்டி உறுதிப்படுத்தி உள்ளனர்.