மழைக்காக பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினாலும் மழையை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்த ரசனைக்கார எழுத்தாளர், கரிசல் இலக்கியத்தின் தந்தை கி. ராஜநாராயணனின் 98வது பிறந்த நாள். கோவில்பட்டி அருகிலுள்ள இடைசெவல் கிராமத்தில் 1922 செப்டம்பர் 16ம் தேதியன்று பிறந்த கி.ராவின் முதல் கதை 1958ல் சரஸ்வதி இதழில் வெளியானது.
எஸ். ராமகிருஷ்ணன்
கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள் ஆகிய இரு பெரும் புதினங்களின் மூலம் தமிழ் எழுத்துலகில் மாபெரும் உயரத்தை அடைந்த கி.ரா., சாகித்ய அகாதெமி, இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளையும் பெருமைகளையும் பெற்றவர். இடைசெவல் கிராமத்தில் ஒரு விவசாயியாக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னாளில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.
98வது பிறந்த நாளைக் கொண்டாடிவரும் கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி. ரா.வுக்கு ஞானபீட விருது வழங்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துள்ளார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். இதுதொடர்பாக அவர் தன் இணையதளத்தில் காணொலி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
புகைப்படம்: புதுவை இளவேனில்
"தமிழ்மொழியில் இதுவரை அகிலன், ஜெயகாந்தன் ஆகிய இருவருக்கு மட்டுமே ஞானபீட விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மலையாளத்தில், கன்னடத்தில் தலா நான்கு பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழின் மகத்தான படைப்பாளியாகத் திகழும் கி.ரா. அவர்களுக்கு ஞானபீடம் விருது வழங்கப்படவேண்டும்" என்றும் எஸ்ரா வலியுறுத்தியுள்ளார்.
இந்திரன்
கி. ரா வுக்கு ஞானபீடம் ஏன் கொடுக்க வேண்டும்? என்ற கேள்விக்குப் பதிலளித்த கலை விமர்சகர் இந்திரன், " பனிக்கட்டியாய் உறைந்துபோன எழுத்து மொழியிலிருந்து தமிழை விடுவித்து சலசலக்கும் நீரோடைபோல பாயும் பேச்சு மொழியை தனது கதையின் வழியாக அவர் தேர்ந்தெடுத்தார். உலகமயமாக்கலினால் அடையாளம் இழந்து வரும் கிராமங்களில் ஆன்மாக்களை தனது எழுத்துக்களின் மூலமாக ஆவணப்படுத்தி சாதனைபுரிந்தவர்" என்கிறார்.
புதுச்சேரியில் வசித்துவரும் அவர், தளராத முதுமையிலும் எழுத்தைக் கைவிடாமல் வைத்திருக்கிறார். அண்மையில் ஆண் - பெண் உறவுகளைப் பேசும் அண்டரெண்டப்பட்சி என்ற புதினத்தை டிஜிட்டல் வடிவத்தில் வெளியிட்டு, உலகம் முழுவதும் வாழும் லட்சக்கணக்கான தமிழ் வாசகர்களைச் சென்றடைந்துள்ளார்.