சென்னையை அடுத்த செங்குன்றத்தில் பாஜக சார்பில் போதை பொருள் நடமாட்டத்தை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் நேற்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகையும், பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், பெண்களுக்கு தமிழ்நாடு அரசு மாதம் தோறும் வழங்கும் ரூபாய் 1,000 திட்டத்தை ‘பிச்சை’ என குறிப்பிட்டு பேசி இருந்தார்.
அவர் பேசுகையில், ”கலைஞரின் மகன் தமிழை தவறாக பேசுவது கஷ்டமாக இருக்கிறது. 1,000 ரூபாயை மகளிருக்கு பிச்சையாக போடுகிறீர்கள். போதைப் பொருள், டாஸ்மாக் இல்லாமல் இருந்தால் 1,000 ரூபாய் கைநீட்டி பிச்சை வாங்க வேண்டிய அவசியம் பெண்களுக்கு இருக்காது. அதற்கு பதிலாக, 1,000 லட்சம் சம்பாத்தித்து கொடுப்பார்கள் பெண்கள். இதை மறைக்கவே 1,000 ரூபாயை காண்பித்து பெண்களை ஏமாற்றும் வேலை நடக்கிறது. எங்களுக்கு ஓசியில் எதுவும் கொடுக்க வேண்டாம்.
வங்கியில் வட்டியில்லாமல் கடன் பெற்று ரசம், வடை விற்றுகூட பிழைப்பு நடத்தி கொள்ளலாம் இன்றைய பெண்கள். அப்படிப்பட்ட தாய்மார்களுக்கு இந்த 1,000 ரூபாயை பிச்சை போடுகிறீர்களா நீங்கள்? அதனை பார்த்து தாய்மார்கள் வாக்களிப்பார்கள் என நினைக்கின்றீர்கள். மோடி என்ற ஒருவர் இருக்கும் போது யாரிடமும் பெண்கள் பிச்சை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.
இந்த சர்ச்சை கருத்தை எதிர்த்து பல கண்டனங்கள் கிளம்பின. ‘பெண்களை கொச்சைப்படுத்தும் குஷ்புவை பாஜக கட்சியை விட்டு நீக்குமா?’ என திமுக செய்தித் தொடர்பாளர் சூரியா கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் இக்கண்டத்திற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக தனது x வலைதளப்பக்கத்தில் இன்று பதிலளித்துள்ளார் குஷ்பு.
அதில் அவர், “1982ல், அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஏழைகளுக்கு வழங்கிய இலவச உணவை 'பிச்சை' என்று முரசொலி மாறன் கூறியபோது, இந்த சுயநல மற்றும் பாதுகாப்பற்ற கூட்டத்தை சேர்ந்த யாரும் அதைக் கண்டிக்கவில்லை.
‘ஓசியில் கொடுப்பதால்தான் பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள்’ என்று பொன்முடி சொன்னபோதும், ‘மதுரை உயர்நீதிமன்ற கிளை, டாக்டர் கலைஞர் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பிச்சையாக வீசியது’ என எ.வ.வேலு சொன்னபோதும்கூட யாரும் அதை கண்டிக்கவில்லை. ஏன்? அப்போது நீங்கள் அனைவரும் கண் பார்வையற்று, வாய்ப்பேச முடியாத, காதுகேளாதவர்களாக இருந்தீர்களா?
நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். போதைப்பொருள் பரவலை தடுத்து நிறுத்துங்கள், டாஸ்மாக்கில் இருந்து உங்கள் கமிஷனை நிறுத்துங்கள். டாஸ்மாக்கில் ஆண்கள் பணம் செலவழிக்கா நிலையை ஏற்படுத்துங்கள். அதற்கு உழைக்கும் பெண்களுக்கு உதவுங்கள். நீங்கள் கொடுக்கும் பணத்தை விட குடிகாரர்களால் தாய்மார்கள் படும் வேதனையின் அளவு அதிகம். பெண்களை சுதந்திரமாக ஆக்குங்கள், அவர்களுக்கு உங்கள் 1000/- ரூபாய் தேவையில்லை.
போதைப்பொருளை தடுத்தாலேவும், கண்ணியத்துடன் வசதியாக குடும்பம் நடத்தும் அளவுக்கு பெண்கள் பணம் சேமிப்பார்கள் என்று நான் இப்பொழுது கூறுக்கொள்கிறேன்.
அதைவிடுத்து அடுத்த 14 தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நினைக்கின்றீர்கள். அதற்கு இந்த உலகத்தில் உள்ள மற்றவர்களை விட அதிக பணத்தேவை திமுக-விற்கு உள்ளதென்று நான் நினைக்கிறேன். அதற்கு உங்களின் பொய் பிரசாரத்தினை தொடர்கின்றீர்கள். தொடருங்கள், ஏனெனில் அதுமட்டும்தான் தமிழ்நாட்டில் நீங்கள் தோல்வியடைந்ததை அம்பலப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.