முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து கேரளாவைச் சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அணை பராமரிப்புக்காக இயந்திரங்கள், உபகரணங்களை எடுத்துச் செல்ல வசதியாக 23 மரங்களை வெட்டுவதற்கு இதுவரை கேரள அரசு அனுமதி தரவில்லை என கூறப்பட்டுள்ளது. அணையை பராமரிக்க செல்வதற்கான சாலையையும் செப்பனிடாமல் மோசமாக வைத்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து இதுவரை 40 முறை வெவ்வேறு நிபுணர்களால் அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டு, அதன் பலம் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அணை பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழகம் மேற்கொள்ளவில்லை என்று சொல்வது தவறானது என்றும் கூறப்பட்டுள்ளது.
அணை பராமரிப்பு பணியை காலதாமதப்படுத்தும் நோக்கிலும், 152 அடி வரை அணையில் நீர் தேக்கி வைக்கக் கூடாது என்பதற்காகவுமே ஜாய் ஜோசப் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்றும் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.