செய்தியாளர்: ரவி
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர், அருங்காட்டு அம்மன் பெரிய அம்மன், சின்ன அம்மன் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன.
இக்கோவிலில் ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் அன்னப்பறவை, பூத வாகனம், குதிரை, சுழல் குதிரை, புலி உள்ளிட்ட வாகனங்கள் தனித்தனியாக உள்ளன. இந்த வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருவது வழக்கம். இக்கோயிலில் பல நூறு ஆண்டுகளாக பட்டியலின மக்கள் கோவிலுக்குச் சென்று பூஜை பொருட்களை கொடுத்து வழிபட முடியாமல் இருந்தனர்.
கோவிலின் வெளிப்பகுதியில் இருந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு சென்று வந்தனர். இதனால் கடந்த 2004ல், கோவில் திருவிழாவின்போது, இருவேறு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அதாவது 21 ஆண்டுகளுக்குப் பின் கோவில் திருவிழாவை நடத்த அனைத்து சமுதாயத்தினரும் முன் வந்தனர். இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் திருவிழாவிற்கான தேதி குறிக்கப்பட்டது.
அதன்படி திருவிழாவின் போது பட்டியலின சமுதாய மக்கள் மாவிளக்கு, தேங்காய், பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள், மேளதாளத்துடன் ஊர்வலமாக ஆடிப்பாடி வந்தனர். தொடர்ந்து, நுழைவாயில் வழியாக கோவிலுக்குள் சென்று பூஜை பொருட்களைக் கொடுத்து, கருவறை முன் கைலாசநாதர், அருங்காட்டும்மன் உள்ளிட்ட சுவாமிகளை வழிபாடு செய்து விட்டு மகிழ்ச்சியுடன் சென்றனர்.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அருங்காட்டு அம்மன், சின்ன அம்மன், பெரிய அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுடன் சுழல் குதிரை வாகனத்தில், இரவு 11:00 மணியளவில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து அதிகாலை 4:00 மணி அளவில், சுவாமி திருவீதி விழா முடிந்து கோவிலை வந்தடைந்தது.