கீழடியில் எடுக்கப்பட்ட பொருட்கள் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்லி ராஜ்யசபாவில், தி.மு.க. எம்.பி. கனிமொழி, ‘கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதா?’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் மகேஷ் சர்மா, ‘கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2,160 ஆண்டுகளும், மற்றொரு பொருள் 2,200 ஆண்டுகளும் பழமையானவை. கீழடியில் கிடைத்த 2 பொருளையும் அமெரிக்காவில் உள்ள நிறுவனம் ஒன்று ஆய்வு செய்தது. மேலும், அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது, அங்கு சுமார் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5,300 தொன்மை வாய்ந்த பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன. அந்த அகழாய்வு குழியின் இடை அடுக்கில் எடுக்கப்பட்ட பொருட்களில் கரிம பகுப்பாய்வு சோதனை நடத்தப்பட்டது. இதன்மூலம் கீழடியில் இருந்தது நகர நாகரிகம் என்றும், அது கி.மு. 2 ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பதும் உறுதிபடுத்தப்பட்டது’ என்றார்.