கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலையின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று தளங்களிலும் தமிழக தொல்லியல் துறை சார்பில் 8ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கீழடியில் 5 குழிகளும். கொந்தகை மற்றும் அகரத்தில் தலா இரண்டு குழிகளும் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த வாரம் கீழடியில் இரண்டு மெகா சைஸ் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து தற்போது இந்த இடத்தில் இரும்பு துண்டுகள், இரும்பை காய்ச்சும் போது மீதமான உருக்கு கழிவுகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன. 2600 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை காய்ச்சி ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இதனால் கீழடியில் இரும்பை உருக்கும் தொழிற்சாலை இருந்திருக்க வாய்ப்புள்ளது. 6ஆம் கட்ட அகழாய்வின் போது இரும்பு ஆயுதம், குத்துவாள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. எனவே 2600 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து நடைபெறும் அகழாய்வின் போது உறுதியான ஆதாரம் வெளிப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்