கீழடியில் நடைபெற்று வரும் 8-ஆம் கட்ட அகழாய்வில், சரிந்த நிலையில் கூரை ஒடுகள், 5 மண் பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 8ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. தொல்லியல் துறை இணை இயக்குனர் (கீழடி அகழாய்வு ) ரமேஷ் தலைமையில் தொல்லியல் அலுவலர்கள் காவ்யா, அஜய் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கீழடியில் இதுவரை ஐந்து குழிகள் தோண்டப்பட்டு நீள் வடிவ தாயகட்டை உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. புதிதாக தோண்டப்பட்ட குழியில் சரிந்த நிலையில் கூரை ஒடுகளும், ஐந்து சுடுமண் பானைகளும் கிடைத்துள்ளன. கீழடியில் இதுவரை நடந்துள்ள எட்டு கட்ட அகழாய்வில் 6ஆம் கட்ட மற்றும் 8ஆம் கட்ட அகழாய்வுகளில் மட்டும் சரிந்த நிலையில் கூரை ஓடுகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கீழடி அகழாய்வில் அதிகளவில் பெண்கள் அணியும் பச்சை நிற பாசி மணிகளும், பாண்டி விளையாட்டு வட்ட சில்லுகளும் அதிகளவில் கிடைத்து வருகின்றன. எனவே கீழடியில் பெரும்பான்மையான மக்கள் வசித்திருக்க கூடும் என தெரிய வந்துள்ளது. அகரம், கொந்தைகையில் மார்ச் 30 முதல் தலா ஒரு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வரும் வேளையில் கூடுதலாக தலா ஒரு குழிகள் தோண்டும் பணி தொடங்கியுள்ளது.
தமிழக தொல்லியல் துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் அகழாய்வில் பண்டைய கால பொருட்கள் அதிகளவில் கிடைத்து வருகின்றன