“மக்களுக்காக துவங்கப்பட்ட திராவிட இயக்கம், தற்போது மிட்டா மிராசு காரர்களுக்கான இயக்கமாக மாறியுள்ளது” என முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி விமர்சித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கே.சி பழனிசாமி, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.சி.பழனிசாமி, “தமிழக மக்கள் இன்று எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து ஆளுநரை சந்தித்து தெரிவித்துள்ளேன். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 250 கோடி ரூபாய் திமுக செலவு செய்துள்ளது. இதனை எடப்பாடி பழனிச்சாமி பேச மறுக்கிறார். இது ஜனநாயகத்திற்கு சவாலான ஒரு சூழலாக உள்ளது.
சாமானியன் வர வேண்டும் என அண்ணா கட்சி துவங்கிய நிலையில், இன்று மிட்டா மிராசினர் மட்டுமே அரசியலுக்கு வர வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் புகார்களை பட்டியலிட்டு ஆளுநரிடம் கொடுப்போம். அதிமுக தொண்டர்கள் எம்ஜிஆரின் பக்கத்தில் தான் இருக்கிறார்கள், வேறு யாரு பக்கத்திலும் இல்லை. அதிமுகவில் சாதி இல்லை, மதம் இல்லை, இனமில்லை. இது அனைத்திற்கும் அனைவருக்கும் பொதுவானது.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்றுதான் தீர்ப்பு வந்துள்ளது, அதில் போடப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பு வரவில்லை. எடப்பாடி பழனிசாமி பொறுப்புக்கு வந்த பிறகு எத்தனை தேர்தலில் அவர் வெற்றி பெற்று இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்னைகளும் தீர்வுகாணப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய ஒருவர் தலைவர் ஆவார்” என தெரிவித்தார்.