கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. இதில் தமிழகத்திலிருந்து 2,095 பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
கச்சத்தீவில் இன்று தொடங்கி இரு நாள்கள் நடைபெறும் திருவிழாவில், இன்று இரவு சிலுவைப்பாடு நிகழ்ச்சியும், திருப்பலியும் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து நாளை காலை திருவிழாவின் சிறப்பு திருப்பலி தமிழ் மொழியிலும், முதல்முறையாக சிங்கள மொழியிலும் நடைபெறவுள்ளது. இலங்கையின் காலே மறைமாவட்ட ஆயர் ரேமன்ட் விக்கிரமசிங்க சிங்கள மொழியில் திருப்பலியினை நடத்த உள்ளார்.
இத்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தில் இருந்து 2,095 பேர், 62 விசைப்படகுகள் மூலம் கச்சத்தீவு செல்கின்றனர். இந்நிலையில் இலங்கை ராணுவ உதவியுடன் அமைக்கப்பட்ட மெழுகுவர்த்தி வளைவை, நெடுந்தீவு பங்கு தந்தை எமில்போல் சிறப்பு திருப்பலி நடத்தி திறந்து வைத்தார்.