தமிழ்நாடு அரசுக்கு போட்டியாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், காசி ஆன்மிக சுற்றுப் பயணத்தில் பங்கேற்ற முதல் அணி, காசியில் தரிசனத்தை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பினர். இவர்களை இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு சால்வை அணிவித்து வரவேற்றார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்து சமய அறநிலைத்துறை மானிய கோரிக்கையில் ஏழாவது கோரிக்கையாக ஆன்மிக பயணம் மேற்கொள்வதற்கு முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கும் ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கும் புனித யாத்திரை அறிவித்திருந்தோம். முதலமைச்சர் முக.ஸ்டாலின் இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கியிருந்தார்.
இதையடுத்து முதற்கட்டமாக 66 நபர்கள் காசிக்கு சென்று திரும்பியுள்ளனர். அவர்களுக்கு இந்து சமய அறநிலைத் துறை சார்பில் இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டில் மொத்தம் 200 நபர்கள் ஆன்மிக பயணம் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில், முதற்கட்ட பயணம் முடிவு பெற்றுள்ள நிலையில், இரண்டாம் கட்ட பயணமாக மார்ச் 1 மற்றும் மூன்றாம் கட்டமாக மார்ச் 8ஆம் தேதி பக்தர்கள் காசிக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
தமிழகத்தில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த நபர்கள் ஆன்மிக பயணத்தை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த ஆண்டு ஆன்மிக பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்து செல்ல முடியாதவர்களுக்கு அடுத்த ஆண்டு முன்னுரிமை வழங்கப்பட்டு ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்படுவார்கள்” என்றார். தொடர்ந்து அவரிடம் பத்திரிகையாளர்கள் தரப்பில் “காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு போட்டியாக திமுக இந்த ஆன்மிக பயணத்தை தொடங்கியதா?” என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “யாருக்காகவும் இது போட்டி அல்ல. கடந்த ஆண்டு மானிய கோரிக்கையில் இதை அறிவித்து விட்டோம். ஆனால், இப்போதுதான் இந்த காசி சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழக அரசுக்கு போட்டியாக தான் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போதுதான் ஆன்மிக பயணத்தை தொடங்கி இருக்கிறோம். பக்தர்கள் வரவேற்பை பொறுத்து தமிழக அரசிடம் மானியம் பெற்று இதற்கான எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.