கரூர் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கிய ஆட்டைக் காப்பாற்ற முயன்றவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழையால், அந்தப் பகுதியில் இருந்த மின்கம்பம் சாய்ந்தது. இதனால் மின் கம்பிகள் தரையில் விழுந்து கிடந்தன. இது குறித்த கிராமத்து பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் மின்வாரியத்தினர் மின் இணைப்பைத் துண்டித்தனர். ஆனால் சாய்ந்த மின்கம்பத்தையும், தரையில் விழுந்து கிடந்த மின்கம்பியையும் சீர் செய்யவில்லை.
இந்நிலையில் வல்லம் கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி கண்ணன், மின்கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது ஆடுகளில் ஒன்று மின்கம்பி அருகே சென்றபோது, ஆட்டின் மீது மின்சாரம் பாய்ந்து கத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணன், ஓடிச்சென்று ஆட்டைக் காப்பாற்ற முயன்றார். அப்போது அவர்மீதும் மின்சாரம் பாய, ஆடுடன் சேர்ந்து அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து லாலாபேட்டை காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், வல்லம் அருகே நடைபெறும் திருவிழாவிற்காக, சாய்ந்து கிடந்த மின்கம்பங்கள் வழியாக சிலர் மின்சார இணைப்பை கொடுத்ததாக தெரியவந்துள்ளது.