ஏர் கலப்பை பிடித்து போஸ் கொடுத்தால் விவசாயி ஆக முடியாது என கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கோவை கருத்தம்பட்டியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, கரூர் எம்.பி ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது பேசிய ஜோதிமணி, துண்டை கட்டிக்கொண்டு ஏர் கலப்பை பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்தால் விவசாயி ஆக முடியாது என விமர்சனம் செய்தார். அதிமுகவுக்கும் பாஜகவிற்கும் முடிவு கட்டும் தேர்தலாக வரும் சட்டமன்ற தேர்தல் அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் “காங்கிரஸ், திமுக தமிழகத்திற்குச் செய்த சாதனைகளை பட்டியலிட நாங்கள் தயார்.ஆனால் அமித் ஷா தமிழகத்திற்குச் செய்த துரோகங்களைத் தான் பட்டியலிட முடியும். அந்த துரோகத்திற்கு துணை போனதுதான் அதிமுகவின் தலையாய சாதனை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே பேசிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், அறுபடை வீட்டிற்கு பாஜகவினர் செல்லட்டும், நாம் ஏழை வீடுகளுக்கு செல்வோம் எனத் தெரிவித்தார். மேலும், அரசிடம் இருந்து விவசாயிகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.