அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊர், கரூர் நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராமேஸ்வரபட்டி ஆகும், இங்கு செந்தில் பாலாஜியின் தந்தை வேலுச்சாமி, தாய் பழனியம்மாள் ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை கேரள பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 5 க்கும் மேற்பட்டோர் செந்தில் பாலாஜியின் தந்தை வேலுச்சாமி, தாயார் பழனியம்மாளிடம் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குறித்த தகவல்களை கேட்டறிந்தனர். அவர் எங்கே உள்ளார்? கடைசியாக இங்கு எப்போது வந்தார் என்பது குறித்த பல்வேறு தகவல்களை பெற்றோரிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இங்கு வந்த 5 அதிகாரிகளில் ஒருவர் பெண் அதிகாரி. அவர் செந்தில் பாலாஜியின் தாயார் பழனியம்மாளிடம் சில மணி நேரங்கள் விசாரித்துள்ளார். செந்தில் பாலாஜியின் பெற்றோர் வயதானவர்கள் என்பதால், உறவினர. ஒருவரை வைத்துக் கொண்டு இந்த விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணை மட்டுமல்லாது அவரது இல்லத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தியுள்ளனர்.
மேலும், அசோக்குமார் தனது பெற்றோரை பார்க்க வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடந்த மே மாதத்திலிருந்து, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் இல்லம் மற்றும் அசோக் குமார் புதிதாக கட்டி வரும் பங்களா, செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் என 50-க்கும் மேற்பட்டோரிடம் பலமுறை விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த விசாரணையின் போது செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டி வரும் பங்களாவை விற்பனைக்கு தடை விதித்து பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அமலாக்கத் துறையினர் கடிதம் அளித்துள்ளனர். அதேபோல அசோக்குமாரின் அலுவலகத்திற்கும் சீல் வைத்துள்ளனர். இந்நிலையில், இன்று செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் 7 மணி நேரத்துக்கும். மேலாக விசாரணை மற்றும் சோதனை நடத்தினர்.
காலை 8 மணிக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மதியல் 3.30 மணிக்கு மேல் சோதனையை நிறைவு செய்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.