கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் புதிய எஸ்பியாக விக்ரமனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்றத்தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி முடிவடைந்தது. ஆனால் தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவில்லை. இதையடுத்து மே 19ம் தேதி 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கான தீவிர ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.
இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அந்த மாவட்ட எஸ்பி ராஜசேகர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கணினிமயமாக்கல் எஸ்பி விக்ரமனை நியமனம் செய்து உள்துறை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு பேட்சின் ஐபிஎஸ் அதிகாரி எஸ்பி விக்ரமன், இதற்கு முன்னர் திருநெல்வேலி எஸ்பியாகவும், விழுப்புரம் எஸ்பியாகவும், திருவாரூர் மாவட்ட எஸ்பியாகவும், டிஜிபி அலுவலகத்தில் கணினிமயமாக்கல் எஸ்பியாகவும் பணியாற்றியுள்ளார்.