கரூரை சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி தமிழாசிரியர், தமிழக முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு தனது சொந்த நிதியிலிருந்து 50 ஆயிரத்தை வழங்கியது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கரூர் மாவட்டம் செல்லாண்டிபாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றுபவர் நாகராஜன். பார்வை மாற்றுத்திறனாளியான இவர், கடந்த 2006ஆம் ஆண்டு தொகுப்பூதிய அடிப்படையில் தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பணிக்குச் சேர்ந்தார். அதே ஆண்டு திமுக ஆட்சி அமைந்தவுடன் பணி நிரந்தரம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பொதுமக்கள் நிதி வழங்குங்கள் என தமிழக முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து தமிழக ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் முதல்வரின் பொது நிவாரணநிதிக்கு, நிதி திரட்டப்பட்டு வருகிறது. மாவட்டந்தோறும் நிதி திரட்டப்பட்டு அந்த தொகையை முதல்வரிடம் வழங்க தமிழக ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு தமிழாசிரியர் நாகராஜன் 50,000 ரூபாயை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கியுள்ளார். இந்த தொகைக்கான வரைவோலையை தமிழக ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகளிடம் இன்று வழங்கினார். தமிழக முதல்வரின் பொது நிவாரணநிதிக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கியது குறித்த தகவலை கரூர் சட்டமன்ற உறுப்பினரும் மின் துறை அமைச்சருமான செந்தில்பாலாஜியின் அலுவலகத்திற்கு சென்று தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கொரோனா நிவாரணத்திற்காக தமிழக முதல்வர் நிதி திரட்டுகிறார், பார்வையற்ற மாற்றுத் திறனாளியான நான், தமிழக அரசு ஊதியத்தின் மூலமே இன்று நல்ல நிலையில் உள்ளேன். எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 50,000 நிதி வழங்கியுள்ளேன் என்றார்.