கரூரில் திருநங்கை ஒருவர் கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் ஆக்சிஜன் செறிவூட்டி வாங்க பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்கியது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
கொரோனா வைரஸ் 2ம் பரவலில் நோய் தொற்றால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி வரும் நோயாளிகளில் பலர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். இதை தவிர்க்க ஒவ்வொரு மருத்துவமனையிலும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழக்கும் கட்டமைப்புகளை அதிகப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் போர்ட்டபிள் ஆக்சிஜன் செறிவூட்டிகளை தங்கள் சொந்த செலவில் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கரூரைச் சேர்ந்த திருநங்கை ஓவியா பல ஆண்டுகளாக டைலரிங் தொழில் செய்து சேமித்த ரூபாய் 10 ஆயிரத்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி வாங்க கரூர் எம்பி. ஜோதிமணியிடம் வழங்கினார்.