கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலில் முக்கிய நபரை கைது செய்யும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
‘கறுப்பர் கூட்டம்’ எனும் யூ-டியூப் சேனலில் இந்து மதத்தையும், கடவுள்களையும், இந்து மதத்தினரின் உணர்வுகளையும் புண்படுத்துமாறு வீடியோக்கள் பதிவிடப்பட்டிருப்பதாக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ‘கறுப்பர் கூட்டம்’ யூ-டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்தவர்களை கண்டித்து பாஜக நிர்வாகிகளின் வீடுதோறும் முருகன் திருவுருவப் படத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் முருகனும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “லட்சக்கணக்கான மக்கள் தமிழ்க் கடவுள் முருகனை நினைத்து போற்றும் கந்த சஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கொச்சைபடுத்தியதை கண்டிக்கிறோம். கீழ்த்தரமான, கேவலமான விமர்சகர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கறுப்பர் கூட்டத்திற்கு காவி கூட்டம் தக்க பதிலடி கொடுக்கும். செந்தில்வாசன் என்ற ஒருவரை மட்டும் தமிழக அரசு கைது செய்துள்ளது. அதை வரவேற்கிறேன்.
ஆனால் முக்கிய நபர் கைதாகவில்லை. அவரை கைது செய்யும் வரை பாஜக போராட்டம் தொடரும். பின்புலம் உள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரேந்திரனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து, குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். தற்போது கோயில்களில் அர்ச்சனை செய்வது போல அனைத்து கோயில்களிலும் செய்ய வேண்டும்” என்றார்.